Published : 31 Jan 2020 07:47 AM
Last Updated : 31 Jan 2020 07:47 AM

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கம்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பழநிக்கு 40 சிறப்பு சொகுசு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுபோக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கு.இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பழநியில் நடக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர் கள் சென்றுவர வசதியாக ஆண்டுதோறும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 8-ல் தைப்பூசம்

இந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பழநியில் தைப்பூசத் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இருந்து வரும் 7-ம் தேதி 15 சிறப்புப் பேருந்துகளும், திருச்சி, திண்டுக்கல்லில் இருந்து தலா 5, கோவை, மதுரையில் இருந்து தலா 4, சேலத்தில் இருந்து 3 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் காரைக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு சிறப்புப் பேருந்து என மொத்தம் 40 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர், பழநியில் இருந்து பிப். 8-ம் தேதி சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களுக்கு 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந்து களுக்கு www.tnstc.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.redbus.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

மேலும், தகவல்களுக்கு 94450 14412, 94450 14450, 94450 17791 மற்றும் 94450 14463 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x