

சென்னை மாநகரப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்காக ‘நிர்பயா' நிதியில் இருந்து ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் 15 நடமாடும் கழிவறை வாகனங்களை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுடெல்லியில் கடந்த 2012-ம்ஆண்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படாத நிலையில், அச்சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அப்பெண்ணுக்கு ‘நிர்பயா’ என பெயரிட்டிருந்தனர்.
ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு ‘நிர்பயா’ என்ற திட்டத்தை உருவாக்கிய மத்திய அரசு, அதற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியது.
அத்திட்டத்தின் கீழ் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய8 மாநகரங்களில் ‘நிர்பயா’ திட்டநிதியில் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தியது.
கருத்துரு
சென்னையில் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்த கருத்துருவை ரூ.425 கோடி மதிப்பீட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு சென்னை மாநகராட்சி ஏற்கெனவே அனுப்பி இருந்தது. அதற்கு மத்திய அரசுஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சென்னை யில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மகளிர் இயற்கை உபாதைகளை கழிக்க வசதியாக மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை வாகனங்களை வாங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் சுமார் 5 ஆயிரம் மகளிர் போலீஸார் உள்ளனர். சில நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள், முக்கிய தலைவர்கள் வருகை, ஆர்ப்பாட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள் போன்றவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் இவர்கள் இயற்கை உபாதை களை கழிக்க போதிய வசதிகள்இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதை கருத்தில்கொண்டு மாநகராட்சி சார்பில் ‘நிர்பயா’ நிதியிலிருந்து ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் 15 நடமாடும் கழிவறை வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மகளிர் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்படும். மாநகராட்சி வழங்க உள்ள இந்த சேவை, மகளிர் போலீஸாருக்கு பேருதவியாக இருக்கும். இதில் பிற மகளிரும் அனுமதிக்கப்படுவர்.
அம்மா ரோந்து வாகனம்
‘நிர்பயா’ நிதியிலிருந்து காவல்துறை மூலமாக ஏற்கெனவே பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.7 கோடியே 50 லட்சத்தில் ‘அம்மா ரோந்து வாகனம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ரூ.8 கோடியில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான நவீன இ-கழிவறைகளை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் பாதுகாப்பு கருதி, சென்னையில் நிறுவப்பட்டுள்ள 2 லட்சத்து 85 ஆயிரத்து 828 எல்இடி தெரு மின் விளக்குகள் இரவு நேரங்களில் முறையாக எரிகிறதா என்பதை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கும் வசதி, ரூ.40 கோடியே 40 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர். ‘நிர்பயா’ நிதியிலிருந்து காவல்துறை மூலமாக ஏற்கெனவே பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.7 கோடியே 50 லட்சத்தில் ‘அம்மா ரோந்து வாகனம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.