

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் ரூ.37 கோடியிலும், உயர்கல்வித் துறை சார்பில் ரூ.92 கோடியிலும் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர்பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மையக் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
அதுபோல ஒரத்தநாடு, ராஜபாளையம், திண்டிவனம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் ரூ.37 கோடியே 45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை சார்பில் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார். இதுபோல பிற அரசு கல்லூரிகளிலும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை அரசு பொறியியல் கல்லூரி, சென்னை ராணி மேரி கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ரூ.91 கோடியே 91 லட்சத்து 73 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.