கரோனா வைரஸ் பாதிப்பை அறிய ஓரிரு நாட்களில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை வசதி- பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தகவல்

கோவை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த பொதுசுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி (இடமிருந்து 2-வது). உடன், மருத்துவமனையின் டீன் டாக்டர் அசோகன் உள்ளிட்டோர். படம்:ஜெ.மனோகரன்
கோவை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த பொதுசுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி (இடமிருந்து 2-வது). உடன், மருத்துவமனையின் டீன் டாக்டர் அசோகன் உள்ளிட்டோர். படம்:ஜெ.மனோகரன்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பாதிப்பை அறிய சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் ஓரிரு நாட்களில் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனை யில் நேற்று இரவு ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா வைரஸானது 80 முதல் 90 சதவீதம் கைகள் மூலமே பரவுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளியேறும் எச்சில் துளிகள் மூலம் வைரஸ் பரவுகிறது. இந்தவைரஸ் பராவமல் தடுக்க மால்கள்,திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்கு செல்வோர், பொதுப்போக்குவரத்தில் பயன்படுத்து வோர் வீட்டுக்கு வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடக்கூடாது. வீட்டைவிட்டு வெளியேசெல்வோர் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.இருமும்போதும், தும்மும்போ தும் கைக்குட்டையை வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் இருப்பவர் களிடம் இருந்து சிறிது இடைவெளிவிட்டு இருப்பது நல்லது. வயதானவர்கள், பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இதேபோல, ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பை அறிய புனேவில் உள்ள ஆய்வகத்தில் வசதி உள்ளது. அங்கு மாதிரியை அனுப்பினால் ஒருநாளில் முடிவு கிடைத்துவிடும். அதுதவிர தேவைப்பட்டால் மேலும் 10 இடங்களில் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் ஓரிருநாட்களில் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும். கரோனா வைரஸூக்கு மருந்தே இல்லை என்பது தவறான கருத்து. காய்ச்சல் வந்தால் அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. நீரிழப்பு ஏற்பட்டால் அதையும் கட்டுப்படுத்தலாம். வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளை கண்காணிக்க விமானநிலையங்களில் தனியே மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

கரோனா பாதிப்பை தடுக்க மாநில, மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி தொந்தரவு போன்றவை உள்ளன. சாதாரண காய்ச்சலுக்கூட இதுபோன்ற பிரச்சினை இருக்கும். அதனால், இந்த அறிகுறிகள் இருந்தால் கரோனா வைரஸ் தொற்று என்று யாரும் பயப்பட தேவையில்லை. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் யாரும் தாமாகவே கடைகளுக்குச் சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in