

பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்கியதுபோல் காவல் ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்ததாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெருநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க் வைக்க வேண்டும் என்றால் சென்னை காவல் ஆணையரின் அனுமதியை பெற வேண்டும். அனுமதி பெற முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை, போக்குவரத்துப் பிரிவு காவல்துறை உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் விண்ணப்பித்து தனித்தனியாக தடையில்லா சான்று பெற்று இறுதியாக காவல் ஆணையர் கையெழுத்திட்டு தடையில்லா சான்று வழங்குவார்.
இதேபோல், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2 பேருக்கு குன்றத்தூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான உரிமம் பெற ஆர்.கே.நகரைச் சேர்ந்த சிவகுமார் (47) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் உள்ள லைசென்ஸ் பிரிவில் விண்ணப்பித்துள்ளார்.
பின்னர் தீயணைப்புத் துறை, போக்குவரத்து காவல் துறை, இறுதியாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்டு அனுமதி வழங்கியது போன்று போலி ஆவணங்களை தயார் செய்துள்ளார். இதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
பின்னர், இதுகுறித்து நிர்வாகப் பிரிவு காவல் துணை ஆணையர் செந்தில்குமார் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி மோசடி நடந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து முகவராக செயல்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் சிவகுமார் அவரது கூட்டாளி திருவொற்றியூர் முகேஷ் (29), அகரம் ஜெயபிரகாஷ் (49), அதே பகுதி சுரேஷ் (50), பெரியார் நகர் ரமேஷ் பாபு (45) ஆகிய 5 பேர் மீது மோசடி உட்பட 7 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
பெட்ரோல் பங்க் உரிமையாளரான சிவகுமாருக்கு பெட்ரோல் பங்க் உரிமம் பெறுவது, புதுப்பிப்பது என்பது கைவந்த கலை. முறைப்படி சென்றால் காலதாமதம் ஆகும். சில நேரம் அனுமதி வழங்குபவர்களுக்கு கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவற்றை தவிர்ப்பதற்காக நேரடியாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். தற்போது இதற்காக முகவராக செயல்பட்டு ரூ.4 லட்சம் பெற்றுள்ளார்.
போலியாக தயாரித்த சான்றிதழ் ஒன்றை தவறாக அச்சடித்து, அதில் சீரியல் எண்களை இணைத்து வழங்கியுள்ளனர். பின்னர், அதை திருத்துவதற்காக காவல் ஆணையர் அலுவலகம் சென்றபோது போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். மேலும், காவல் ஆணையரின் கையெழுத்தை பார்த்து அதைப்போலவே போட்டு பழகி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சிவகுமார் இதேபோன்று போலி ஆவணங்கள் மூலம் எத்தனை பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி பெற்றுள்ளார். அவரது பின்னணியில் உள்ளவர்கள் யார், யார் எனவும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியாக தயாரித்த சான்றிதழ் ஒன்றை தவறாக அச்சடித்து, அதில் சீரியல் எண்களை இணைத்து வழங்கியுள்ளனர். பின்னர், அதை திருத்துவதற்காக காவல் ஆணையர் அலுவலகம் சென்றபோது போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.