

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்று வந்த கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் இன்றுடன் (ஜன. 31) நிறைவடைகிறது.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில், பவானி ஆற்றின் கரையோரத்தில் தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது. இதில், தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து 26 யானைகள், புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றன. மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற இந்த முகாம் இன்று (ஜனவரி 31) நிறைவடைகிறது. இதையடுத்து, யானைகள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.
11 வயதாகும் வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஜெயமால்யா யானை முதல், 50 வயதைக் கடந்த பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரி வரை இம்முகாமில் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 கோடி செலவில், சுமார் 6 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில், யானைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தப்பட்டது.
பொதுவாக, யானைகள் அதன் வயதைப் பொறுத்து 2.75 டன் முதல் 3.75 டன் வரை இருக்கலாம் என்ற நிலையில், சில கோயில் யானைகள் குறைந்த எடையுடனும், சில யானைகள் கூடுதல் எடையுடனும் இருந்தன. இதற்கு ஏற்றாற்போல யானைகளுக்கு சரிவிகித உணவுகளும், தினமும் இருவேளை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு முகாமைச் சுற்றி நடைப்பயிற்சியும், மருந்துகளும் வழங்கப்பட்டன.
வனம் சார்ந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில், பிற யானைகளோடு கூட்டமாக ஒரே இடத்தில் தங்கியதால் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டன. இதனால் யானைகளின் உடல் நலம் மட்டுமின்றி, அவற்றின் மன நலமும் மேம்பட்டுள்ளதாக யானைப் பாகன்கள் தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் முகாமிட்டுள்ள இத்தனை யானைகளைக் கண்டு ரசிக்க, முகாமுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இதுதவிர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முகாம் யானைகளைக் காண ஆர்வமுடன் வந்திருந்தனர்.
வெகு உற்சாகமாக நடைபெற்று வந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், அதன் நிறைவை எட்டிவிட்ட நிலையில், இங்கிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற சோகமே பாகன்கள் மத்தியில் நிலவுகிறது.