Published : 30 Jan 2020 10:32 PM
Last Updated : 30 Jan 2020 10:32 PM

அரசு அனுமதி இல்லாமல் தனி நபர் வட்டிக்கு விட்டால் குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது?

வருமான வரித்துறை வழக்கில் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கியதாக ரஜினி தெரிவித்துள்ளார். தனி நபர் உரிமம் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கினால் குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது?கவனிப்போம்.

வருமான வரித்துறை வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த தரப்பில் தாக்கல் செய்த அபிடவிட்டில் என்ன குறிப்பிட்டார் என்கிற தகவல் வெளியானதாக கூறப்பட்டது.

வருமான வரித்துறை வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டிவிட்டேன். இது நான் கடன் கொடுத்தது. அதிலும் நான் யாருக்கும் கடனைத் தொழிலாகக் கொடுக்கவில்லை.
தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தேன்.

அதில் வட்டி வந்தது. இந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இதை நான் தொழிலாக செய்யாத காரணத்தால் வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனி நபர் அரசு அனுமதி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுக்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் ரமேஷ் நடராஜனிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா? அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை?

வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (tamil nadu money lenders act 1957) நடைமுறையில் உள்ளது.

அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம். ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் டெபாசிட் வாங்குவது வட்டிக்குப் பணம் கொடுப்பது என்றால் வங்கி நடைமுறைக்கு கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

நான் டெபாசிட் எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன் என்றால் அதற்கு தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அடகுக் கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும்.

அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் அதை முழு நேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாகச் செய்தால் லைசென்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு தனிநபர் யாருமே தனது வாழ்க்கையில் மற்றவர்களிடம் பணம் கொடுத்து வட்டி வாங்குவது நடக்கும்.

தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்க்கையில் பணத் தேவைக்கு உதவும்போது பணம் கொடுத்து வட்டி வாங்குவது வழக்கமாக இருக்கும். அவர்களை முழு நேரத் தொழிலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதில் லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

தற்போது ரஜினி அபிடவிட்டில் நான் நண்பர்களுக்குப் பணம் கொடுத்து அதற்காக வட்டி வாங்கினார் என்பதை முழு நேரத் தொழிலாக கருத முடியாது. ஒருவருக்கோ, சிலருக்கோ உதவி செய்வதை லைசென்ஸ் வாங்கி செய்யவேண்டும் என்று அவசியமில்லை.

ஒருவேளை ஒருவர் லைசென்ஸ் எடுக்காமல் தொழிலாகச் செய்தார் என்று புகார் வந்தால் அதற்கு தண்டனை ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை.

இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றி சொல்லவில்லை. உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம் என்கிறது. ஒருவேளை நடவடிக்கை வந்தால் அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை''.

இவ்வாறு ரமேஷ் நடராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x