

குரூப்-1 தேர்வு முறைகேடு குறித்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் என திருநங்கை ஸ்வப்னா தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், விசாரணைக்காக பிப்ரவரி 12-ம் தேதி பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு முறைகேடு பூதாகரமான நிலையில் அதில் உள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகின்றன. அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது அதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குரூப்-1 தேர்வில் விடைத்தாள் முறைகேடு குறித்து திருநங்கை ஸ்வப்னா 2017-ல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் விடைத்தாள் மாற்றப்பட்டது குறித்தும், ஒரே பயிற்சி மையத்திலிருந்து 62 பேர் தேர்வானது குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் தேர்வு முறைகேட்டை 6 மாதங்களாக முறையாக விசாரிக்காமல் இழுத்தடித்து வருவதாகவும், தடயவியல் துறையிடமிருந்து இன்னமும் தகவல் பெறவில்லை என்றும், தற்போதைய குரூப்-4 தேர்வு முறைகேடு போல குரூப்-1 மற்றும் குரூப்-2ல் நடந்திருக்க வாய்ப்புள்ளதால் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டுமென ஸ்வப்னா தரப்பு தரப்பு வழக்கறிஞர் மற்றும் தனியார் தொலைக்காட்சித் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
அவர்களது முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, அந்த வழக்குகளை பிப்ரவரி 12 -ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடுவதாகத் தெரிவித்துள்ளனர். பிப்.12-ம் தேதிக்கு வழக்குப் பட்டியலிட்டு விசாரணைக்கு வரும் பட்சத்தில் குரூப்-1 தேர்வு குறித்த விசாரணையில் நடந்தது குறித்து போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய நேரிடும். அதில் திருப்தியில்லாத பட்சத்தில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுகள் இட வாய்ப்புண்டு.