டிஎன்பிஎஸ்சி முறைகேடு; விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி 

டிஎன்பிஎஸ்சி முறைகேடு; விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி 
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தரத் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் தரகர்களாகச் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குரூப்-4 தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது. தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சியில் இன்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''டிஎன்பிஎஸ்சி மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே பலமுறை குற்றச்சாட்டுகளிலிருந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். முழுமையாக விசாரித்து, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in