அதிருப்தியில் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள்: காத்திருந்த புதுவை முதல்வர், மேலிடப் பொறுப்பாளர்

படம்: எம்.சாம்ராஜ்.
படம்: எம்.சாம்ராஜ்.
Updated on
1 min read

காந்தி நினைவு நாள் நிகழ்வுக்காக தொண்டர்கள் அதிகம் பேர் வராத நிலையில், முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் காத்திருந்தனர். தொடர்ந்து தொலைபேசியிலும் பேசி அழைத்தனர்.

புதுச்சேரி அரசானது முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்து விட்டது. இதில் வென்ற எம்எல்ஏக்களுக்கு அமைச்சர், வாரியத்தலைவர் பதவிகள் தரப்பட்டன. நியமன எம்எல்ஏக்கள் பதவியும் பாஜகவினருக்குச் சென்றடைந்து விட்டது. ஆனால், வாரியத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் காங்கிரஸார் நியமிப்பார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தில் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து மேலிடப்பொறுப்பாளர் சஞ்சய்தத்திடம் தங்கள் குறைகளை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலிடத்துக்கும் புகார் தெரிவித்தனர். ஆனாலும் நடக்காததால் பலரும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு காந்தி நினைவு நாள் நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வர் நாராயணசாமி, மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத், மாநிலத் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இருந்தனர். நிர்வாகிகளும் குறைவாகவே இருந்தனர். மிகவும் குறைவான தொண்டர்கள் வந்த நிலையில், கட்சித் தரப்பில் பலரையும் பேசி அழைத்தனர். நீண்ட நேரம் பலரும் வரவில்லை.

இதுதொடர்பாக கட்சித் தொண்டர்கள் கூறுகையில், "ஆட்சி ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய குறைந்த காலமே உள்ளது. கட்சிப் பணியாற்றிய பலரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வாரியத் தலைவர்கள் நியமனத்துக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் தந்தது. ஆனால் இதற்கான கோப்பு ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்படவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வைக்கப்படவில்லை. அதனால் இன்று நடந்த நிகழ்வில் பலரும் பங்கேற்கவில்லை" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in