புதுச்சேரி காங்கிரஸ் அரசில் முற்றும் மோதல்: கட்சித்தாவல் தடை சட்டப்படி எம்எல்ஏ தனவேலு மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு

சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மனு.
சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மனு.
Updated on
1 min read

கட்சித்தாவல் தடை சட்டப்படி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவைப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மனு தந்துள்ளனர். இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசில் மோதல் முற்றியுள்ளது.

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ தனவேலு, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். மேலும் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்திருந்தார். இதேபோல் ஊழல் பட்டியலை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து அளிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜன.30) அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நமச்சிவாயம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, ஜான்குமார் தீப்பாய்ந்தான், விஜயவேனி ஆகியோர் சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், தொடர்ந்து ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகூர் தொகுதி எம்எல்ஏ உறுப்பினர் தனவேலுவை கட்சித்தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா, சட்டப்பேரவை சபாநாயகரிடம் கடிதம் அளித்து இருப்பது மோதல் முற்றியதை வெளிப்படுத்துகிறது.

கடிதம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு கொறடா அனந்தராமன், "கட்சி மற்றும் ஆட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் தொடர்ந்து எம்எல்ஏ தனவேலு ஈடுபட்டு வருகிறார். ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகளோடு கை கோத்து சதி வேலையில் ஈடுபட்டதால் தனவேலுவை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கடிதம் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நமச்சிவாயம் கூறுகையில், "காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலோடு தற்காலிகமாக தனவேலு நீக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கட்சி விரோதப் போக்கில் ஈடுபட்டு வருகிறார். துணைநிலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதால் அவரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா கடிதம் அளித்துள்ளார். ஊழல் புகார்கள் குறித்து தனவேலு ஆதாரத்துடன் நிரூபித்தால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சிவகொழுந்து, "எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஏற்கெனவே அரசு கொறடா கடிதம் அளித்திருந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் கடிதம் அளித்துள்ளார். கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அனுப்பி பின்னர் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in