Published : 30 Jan 2020 02:43 PM
Last Updated : 30 Jan 2020 02:43 PM

முரசொலி விவகாரம்: சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?- ராமதாஸ் கேள்வி

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முரசொலி அலுவலகக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் எழுப்பியிருந்தார். இது தொடர்பாக, விசாரித்து வரும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில், திமுக தரப்பு அது வாடகைக் கட்டிடத்தில் இருக்கிறது என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜன.30) தன் ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?

அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குத்தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்ததுதான்.

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?

அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்துகொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x