

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
வி.முத்துலிங்காபுரத்தில் காளிராஜ் (38) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 40 அறைகளில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்று (ஜன.30) காலை வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிப்பதற்காக மருந்துக் கலவை செய்தபோது ஒரு அறையில் திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை மற்றும் சுற்றியுள்ள நான்கு பாறைகள் உள்பட 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்த விருதுநகர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் காளிராஜ் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பதை அறிய பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் மற்றும் வச்சகாரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் உள்ள முட்புதர் மற்றும் செடிகளை அகற்றுவதற்காக டிராக்டர் கொண்டு உழுதுள்ளனர். அப்போது, பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்க காய வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீது டிராக்டர் ஏறிச் சென்ற போது, வெடி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.