Published : 30 Jan 2020 12:21 PM
Last Updated : 30 Jan 2020 12:21 PM

நானும் கலைஞரின் மகன்தான்; நினைத்ததை சாதித்து முடிப்பேன்: மு.க.அழகிரி

பிறந்த நாள் கேக் வெட்டும் மு.க.அழகிரி, படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

நான் கலைஞரோட பிள்ளை. நினைத்ததை சாதித்து முடிப்பேன் என, மதுரையில் நடந்த பிறந்த நாள் விழாவில் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி இன்று (ஜன.30) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது பிறந்த நாளன்று, மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அவரது ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழகிரியையும், அவரது குடும்பத்தினரையும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்திற்கு அழைத்து வந்து பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள்.

மு.க.அழகிரி, கேக் வெட்டி, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். விழாவில் கலந்து கொண்டோருக்கு அசைவம், சைவம் விருந்து என்று அழகிரியின் பிறந்த நாள் விழா அமர்க்களமாக நடக்கும்.

ஆனால், திமுகவில் இருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள், ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர். அதனால், அழகிரியும் மதுரை பக்கம் பெரும்பாலும் வருவதே இல்லை. கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு பிறந்த நாள் விழாவையும் கடந்த சில ஆண்டாக மதுரையில் அவர் கொண்டாடவில்லை.

ஆனால், அவரது ஆதரவாளர்கள் மட்டும் மதுரையில் அவரது பிறந்த நாளன்று, 'ஒய்வே அறியாதவர்', 'உழைப்பில் கடிகாரத்தையே மிஞ்சியவர்', 'சன்னோட சன்' என்று திமுகவினரையும், ஸ்டாலினையும் வம்புக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டுவார்கள்.

இந்நிலையில், இன்று நீண்ட நாளைக்குப் பிறகு அதே ராஜா முத்தையா மன்றத்தில் தனது ஆதரவாளர் வழக்கறிஞர் மோகன் குமார் இல்லத் திருமண விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட மு.க.அழகிரி, அதே மேடையில் தனது பிறந்த நாளையும் ஆதரவாளர்களுடன் கொண்டாடினார்.

தனது தலைமையில் திருமணத்தை நடத்தி வைத்த அவர், தனது பிறந்த நாள் 'கேக்'கை வெட்டிவிட்டு 'மைக்' பிடித்தார்.

"அன்புத் தலைவர் கருணாநிதி, அன்போடு மோகன் என்று அழைக்கூடிய மோகன் குமார் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது எனக்குப் பெருமையாக உள்ளது. அவர், கருணாநிதியின் உடன்பிறப்புகளுக்கு மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சென்று உதவியுள்ளார்.

மோகன் தான் செய்கின்ற வழக்கறிஞர் தொழிலை வைத்து கட்சியினருக்கு முடிந்த அளவு உதவக்கூடியவர். எல்லோருடனும் நன்கு பழகக்கூடியவர். 2003-ல் என் மீது ஜெயலலிதா ஒரு பொய் வழக்குப் போட்டார். நான் 85 நாட்கள் திருச்சி சிறையில் இருந்தேன். நான் உள்ளே நன்றாகத்தான் இருந்தேன். ஆனால், வெளியே இருந்த வழக்கறிஞர் மோகன் குமார் தினந்தோறும் என்னைப் பார்க்க வந்தபோது அவர் படும் அல்லல்களை எல்லாம் நான் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். அப்படிப்பட்ட நல்ல தம்பி மோகன் குமார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கூட மேடை முன் அமர்ந்து இருக்கும் சகோதரி சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குக் கூட வழக்கறிஞர் மோகன் குமார் எந்த அளவுக்கு உதவி செய்தார் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதையெல்லாம் மறந்திருக்க மாட்டார், மறக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது மறப்பது என்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏனென்றால், அதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தச் சூழலில் மோகன் குமார் எனது தலைமையில் அவரது குடும்பத் திருமண விழாவை நடத்தியிருப்பது, இதை விட ஒரு மகிழ்ச்சியை அவர் என் குடும்பத்தாருக்கு எப்படிக் கொடுக்க முடியும்? என்னைப் பார்த்தாலே சில பேர் ஓடுகின்றனர். அதிமுகவினர் கூட என்னைப் பார்த்தால் வர்றாங்க, பேசுறாங்க. வணக்கம் போடுறாங்க. நான்தான் இந்த ஊரு எம்எல்ஏ, எம்.பி. என்று அவர்களே என்னிடம் அறிமுகம் செய்து கொள்றாங்க.

ஆனால், என் கூட பழகினவங்க என்னைப் பார்ப்பதற்கு வரவே இல்லை. நான் மதுரைக்கு வருவதற்கு முன்பே, நான் எப்போது வருவேன், செல்வேன் என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்றாங்க. நான் வந்ததற்கு அப்புறம் வரலாம் என்று ஊரை விட்டே போயிடுறாங்க.

அந்த அளவுக்கு நிலைமை மாறிபோய் விட்டது. அந்த நிலைமையெல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை. மாறவில்லையென்றால் அவ்வளவுதான். மாறும் என்று நம்புகிறேன். ஏனென்றால் என்னைப் பற்றித் தெரியும். நினைத்ததை சாதிப்பேன். நினைத்ததை முடிப்பேன். மற்றவங்க மட்டும் கலைஞரோட பிள்ளை கிடையாது. நானும் கலைஞரின் மகன்தான்".

இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x