

எஸ்ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை (ஜன. 31) ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது, அவர்களின் காவலை மேலும் நீட்டிக்க அனுமதி கோரி போலீஸார் மனு செய்ய உள்ளனர்.
எஸ்ஐ வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடையில் உள்ளதவுபீக்கின் வீடு மற்றும் திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் ஷமீன்வீடுகளில் சோதனை நடத்தி, தீவிரவாத தொடர்புகள் குறித்த ஆதாரங்கள், முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.
50-க்கும் மேற்பட்ட ஆவணங்கள்
கடந்த 21-ம் தேதி விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்ட நிலையில், இருவரின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்பு தவுபீக்கும், அப்துல் ஷமீமும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அப்போது காவலை மேலும் நீட்டிக்க கேட்டு போலீஸார் மனு செய்ய உள்ளனர். இதற்காக தீவிரவாதிகள் இருவருக்கும் எதிரான ஆதாரங்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாக்குமூலம் பற்றிய விவரங்கள் என 50-க்கும் மேற்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீஸார் தயார்படுத்தி வைத்துள்ளனர்.