Published : 30 Jan 2020 08:03 AM
Last Updated : 30 Jan 2020 08:03 AM

திருச்சி பாஜக நிர்வாகி கொலைக்கு ‘லவ் ஜிகாத்’ காரணமா என்ற கோணத்தில் விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தகவல்

திருச்சி பாஜக நிர்வாகி கொலைக்கு ‘லவ் ஜிகாத்’ காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜக திருச்சி பாலக்கரை மண்டல செயலாளர் விஜயரகு கடந்த 27-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகம்மது உசேன் மகன் பாபு என்ற மிட்டாய் பாபு உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விஜயரகு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன், விஜயரகுவின் வீட்டுக்கு நேற்று சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக விஜயரகு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றதாகவும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மார்க்கெட் பகுதியில் கடையடைப்பு நடைபெற்றபோது, கடைகளை அடைக்கக் கூடாது என்று சுவரொட்டி ஒட்டியதுடன், ஒரு தரப்பினரிடம் பேசி கடைகளைத் திறக்க வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதுமட்டுமின்றி, விஜயரகுவின் மகளை மூளைச்சலவை செய்து திருமணம் செய்ய முயற்சி நடைபெற்றதாகவும், அதை பலமுறை தடுத்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். மேலும், கடந்தஆண்டு விஜயரகுவின் உறவினர் வெட்டப்பட்ட சம்பவத்தில் விஜயரகு சாட்சியாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜயரகு குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், இந்தக் கொலைக்கு ‘லவ் ஜிகாத்' காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த போலீஸாருக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

தொடர்ந்து, விஜயரகு கொலை செய்யப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர், சுற்றுலா மாளிகையில் ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விஜயரகு குடும்பத்தாருக்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.4,12,500 வழங்கப்பட்டது.

மிட்டாய் பாபு சென்னையில் சிக்கினார்

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக நிர்வாகி கொலையில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு உட்பட 2 பேர் சென்னையில் நேற்று தனிப்படை போலீஸாரிடம் சிக்கினர்.

சென்னையில் தலைமறைவாக இருந்த மிட்டாய் பாபு (25), தாராநல்லூரைச் சேர்ந்த மோகன் மகன் ஹரிபிரசாத் (21) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் நேற்று பிடித்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x