யாகசாலை முதல் கோபுர கலசம் வரை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ் ஒலிக்கும்- அறநிலையத் துறை உறுதி; தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்

யாகசாலை முதல் கோபுர கலசம் வரை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ் ஒலிக்கும்- அறநிலையத் துறை உறுதி; தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலையில் தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளில் தமிழுக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும் என அறநிலையத் துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில் பிப்.5-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி திருமுருகன், பெ.மணியரசன், செந்தில்நாதன், சத்தியவேல்முருகன், தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், “தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படுவதில்லை. ஆங்கில புத்தாண்டில் கோயில்களில் இரவில் பூஜைகள் நடைபெறுகின்றன. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மார்கழி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்கு மாற்றப்பட்டது. இது ஆகம விதிப்படி நடைபெறவில்லை. காலத்துக்கு ஏற்ப செய்யப்பட்ட மாற்றம்.

இதனால் கடந்த குடமுழுக்கு சம்ஸ்கிருதத்தில் நடைபெற்றதால், இந்தாண்டும் அதை பின்பற்ற வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தலாம்.

குடமுழுக்கு அழைப்பிதழில் யாகசாலை, சிதம்பரர் மண்டபம், நந்தி மண்டபம் ஆகிய இடங்களில் ஓதுவார்கள் தமிழ் திருமுறைகளை பாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் நந்தி மண்டபம், கொடிமரம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியன முக்கியமானது. ஆனால் நந்தி மண்டபம் வரையே தமிழ் அனுமதிக்கப்படுகிறது. யாகசாலை, நந்தி மண்டபம், நடராஜர் அலங்கார மண்டபம், கருவறை மற்றும கோபுரக் கலசங்கள் ஆகிய 5 நிலைகளில் தமிழ் ஒலிக்க வேண்டும்” என்றனர்.

அறநிலையத் துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில், “யாகசாலையில் இருந்து குடமுழுக்கு தொடங்குகிறது. மகாபிஷேகத்திலும் திருமுறைகள் பாடப்படும். ஆகமங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்காக ஒரே இரவில் அனைத்து பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியாது. யாகசாலை, நந்தி மண்டபம், நடராஜர் அலங்கார மண்டபம், கருவறை மற்றும கோபுரக் கலசங்கள் ஆகிய 5 நிலைகளில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” என்றனர்.

சம்ஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்த மயிலாப்பூர் ரமேஷின் வழக்கறிஞர் வாதிடும்போது, “சம்ஸ்கிருதம் தேவ மொழி. அதிர்வலைகளைக் கொண்ட ஒலி. அதை உச்சரிக்கும் போது சக்தி உருவாகும். அதனாலேயே சம்ஸ்கிருதத்தில் பூஜை செய்யப்பட்ட சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. எனவே சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்" என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in