Published : 30 Jan 2020 07:55 AM
Last Updated : 30 Jan 2020 07:55 AM

அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி- இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெற அரசு அழைப்பு

சென்னை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வே.விஷ்ணுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான வழிகாட்டலும் பயிற்சியும்வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்றபல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில் தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவை பராமரிக்கப்படுவதுடன், மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவையும் இலவசமாக நடத்தப்படுகின்றன.

தன்னார்வ பயிலும் வட்டத்தின்சேவைகளைப் பெற இயலாதவர்களும், தொலைதூர கிராமப்புறப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களும் பயன்பெறுவதற்காக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (http://tamilnaducareerservices.tn.gov.in) செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப் -7பி, 8,டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி,ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்றபோட்டித் தேர்வுகளுக்கான குறிப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், இப்பாடக் குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த வலைதளத்தை செல்போன் மூலமாகப் பயன்படுத்துவதற்காக ஒரு செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (http://tamilnaducareerservices.tn.gov.in) தரவிறக்கம் செய்து தமது செல்போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக் குறிப்புகளைத் தத்தமது செல்பேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க முடியும்.

எனவே, அரசுத் துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் இந்த இணைய தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து இந்த வலைதளத்தின் சேவைகளை இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x