

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தள்ளிவைக்கப்பட்ட 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகள் உள்ளன.
இப்பதவிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த 6-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் உள்ள 27 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகள், 27 துணைத் தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகள், 314 துணைத்தலைவர் பதவிகள், 9 ஆயிரத்து 618 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 300 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல்அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.
அதில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராதது, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நலக்குறைவு, இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் போன்றவற்றால் ஒரு மாவட்டத்துக்கான ஊராட்சிக்குழு தலைவர், துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகள், 41 துணைத் தலைவர் பதவிகள், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் என மொத்தம் 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மாலை 3 மணிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தமறைமுகத் தேர்தலை உரிய போலீஸ் பாதுகாப்புடன் நடத்துமாறு அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மங்களூர் ஊராட்சியில் தள்ளிவைப்பு
இதற்கிடையே கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.