Published : 30 Jan 2020 07:01 AM
Last Updated : 30 Jan 2020 07:01 AM

24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி- சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி தரும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1971-ம் ஆண்டு கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டப்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க முடியும். ஆனால், புதிய திருத்தத்தின்படி, தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம். இந்த கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதுள்ள 1971-ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்படும். சில நிபந்தனைகள் அடிப்படையில் கருக்கலைப்புக்கான உச்ச வரம்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இவை சேர்க்கப்படும்.

பாதுகாப்பான கருக்கலைப்பு சேவை மற்றும் தரத்தில் குறைகளின்றி கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் விரிவான கருக்கலைப்புப் பராமரிப்புச் சேவையை வலுப்படுத்தவும், கருக்கலைப்புக்கு உச்ச வரம்பை அதிகரிக்கவும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பயனடைவார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதை அதிகரிக்கவும், மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மனதில் கொண்டும் அக்கறையுள்ள அனைவருடனும் பல்வேறு அமைச்சகங்களுடனும் விரிவான ஆலோசனை நடந்த பின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த உத்தேச திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x