

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டதாக சென்னை ஆயுதப் படை காவலரின் தம்பியைப் பிடித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்களது குடும் பத்தில் 4 பேர் அரசுப் பணியில் இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகிவிட்ட காவலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
குருப்-4 தேர்வில் நடந்த முறை கேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு அதிகாரிகள், இடைத்தரகர் கள், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை புதுப் பேட்டை ஆயுதப்படையில் காவல ராக இருக்கும் சித்தாண்டி என்ப வருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை கேட்டில் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் சில ஆதாரங்களுடன் செய்தி பரவியது. சித்தாண்டியின் மனைவி, தம்பி, தம்பியின் மனைவி, மற்றொரு தம்பி என 4 பேர் கடந்த ஆண்டு குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவ கங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மையத்தில்தான் தேர்வு எழுதியுள்ளனர். மாநில அளவில், முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். காவலர் சித்தாண்டி இடைத்தரகராகவும் செயல்பட்டு பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு, அரசு வேலை வாங்கி கொடுத்து இருப்பதாகவும் சமூக வலைதள தகவலில் கூறப் பட்டிருந்தது.
இதுகுறித்து, சிபிசிஐடி அதி காரிகள் நேற்று விசாரணையைத் தொடங்கினர். இதில், சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டியின் குடும் பத்தினர் 4 பேர் குரூப்-2, குரூப்-4 தேர்வுகளில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற் றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து நேற்று சிவகங்கைக்கு சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீ ஸார், காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார் பதிவாளரின் நேர்முக உதவியாளராக பணிபுரியும் வேல்முருகனிடம் விசாரணை நடத்தினர். இவர், சித்தாண்டியின் தம்பி என்பதும், கடந்த ஆண்டு குரூப்-2ஏ தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் வேல்முருகனும் முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்ற அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையில் சித் தாண்டி, ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குரூப்-2ஏ தேர்வு
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக எரிசக்தித் துறை அலுவலக உதவியாளராக பணி யாற்றிய திருக்குமரன் (35) என்ப வரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர் 2017-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு மூலம் தேர்வாகி இந்தப் பணியில் சேர்ந்தார். இவரும் ராமேசுவரம் மையத்தில்தான் தேர்வு எழுதியுள்ளார். இந்த குரூப்-2ஏ தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் 30 பேரும், 100 பேரில் 37 பேரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 37-வது இடத்தை பிடித்த திருக்கும ரன், மோசடி செய்தே இந்த பணியில் சேர்ந்து இருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே, குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகள் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வு ரத்து இல்லை
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், துறை செயலாளர் ஸ்வர்ணா, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது எவ்வளவு பெரும் புள்ளியாக இருந்தாலும் சரி, அவர்கள் மீதும் கருப்பு ஆடுகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்த தேர்வையே ரத்து செய்தால், உண்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். குரூப்-4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். அவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது நியாயமில்லை. எனவே, குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.