Published : 29 Jan 2020 09:35 PM
Last Updated : 29 Jan 2020 09:35 PM

மருத்துவரிடம் செல்போனில் கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பெண் பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மருத்துவரிடம் செல்போனில் ஆலோசனை கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் இளம்பெண் பலியான சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர், ஆரிப் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் (30). இவரது மனைவி பரீதா (25). இவர்களுக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பரீதா கர்ப்பம் ஆனார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 21-ம் தேதி அதிகாலை பிரசவ வலி ஏற்படவே, உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரீதாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது அங்கு பணியில் மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பரீதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே பரீதா உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே பரீதா இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து வந்த காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து மருத்துவ மற்றும் ஊரகப் பணிகளின் இயக்குனர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடத்திய விசாரணையில் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் செவிலியர்களே பிரசவம் பார்த்தது உறுதியானது. மேலும் பிரசவத்தின் இடையில் சந்தேகம் ஏற்படவே செல்போனில் மருத்துவரைத் தொடர்பு கொண்டு பேசியதும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகு பரீதாவிற்கு முறையான சிகிச்சைகள் அளிக்காமல் செவிலியர்கள் வெளியே சென்றுள்ளனர். அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. செவிலியர்கள் பிரசவம் பார்த்து பெண் பலியான சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோன்று கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் தோசூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், அவரது உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழ், ஆங்கில நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இரு செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் 4 வாரத்தில் தனித்தனியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x