Published : 29 Jan 2020 05:58 PM
Last Updated : 29 Jan 2020 05:58 PM

அரசு ஆவணத்தில் இல்லாத கண்மாய்கள் ஆக்கிரமிப்பு: மாவட்ட குறைதீர் கூட்டத்தில் மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள் ஆதங்கம்

மதுரை

‘‘மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் அரசு ஆவணத்தில் இல்லாத கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகி வருகின்றன’’ என்று இன்று நடந்த குறை தீர்கூட்டத்தில் ஆட்சியர் டி.ஜி.வினயிடம் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. வேளாண்மைதுறை இணை இயக்குனர் இளங்கோவன்(பொ), தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி, மாவட்டத்தில் பெரும்பாலான நெல் கொள்முதல் மையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. விவசாயிகள் அறுவடை செய்த நிலங்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். வியாபாரிகள், விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி விற்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி மனவாளகண்ணன்; செல்லம்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற இடங்களில் அறுவடை செய்த நெல், காய்ந்துபோய் உள்ளன. இதேபோல், தொடர்ந்து விவசாயிகள் நெல்கொள்முதல் மையங்களை திறக்கக் கோரி பேசினார்.

அப்போது விவசாயி பாண்டியன் உள்ளிட்ட சில விவசாயிகள், ‘‘முதலில் கடந்த கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி சொல்லட்டும், அதன்பிறகு நெல்கொள்முதல் மையங்களை பற்றி பேசலாம், ’’ என்றனர்.

அதற்கு மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதிருப்தியடைந்த ஆட்சியர் டிஜி.வினய், ‘‘அமைதியாக இருங்கள், ஒவ்வொரு விவசாயியும் தங்களின் குறைகளையும், பிரச்சினைகளை சொல்வதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்குமே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இப்படியே சண்டைப்போட்டுக் கொண்டிருந்தால் என்ன நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறதோ அது இல்லாமல் போய்விடும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றி தெரிவிக்கப்படுகிறது. அதை விவசாயிகள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது கூட ஆன்லைன் ஈ-அடங்கல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளே தங்கள் நிலங்கள், அதில் விளைவிக்கப்படும் பயிர், அதன் விவரங்களை, இந்த முறையில் ஆன்லைனில் பதிவேற்றலாம், ’’ என்றார்.

வேளாண்மை துறை இணை இயக்குனர் இளங்கோவன்(பொ), ‘‘பெரியாறு அணை நீர் மட்டம் 118 அடியும், வைகை அணை நீர் மட்டம் 54 அடியும் உள்ளது. கொட்டாம்பட்டி பகுதியில் தாமதமாகவே விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். அதனால், அவர்களுக்கு மார்ச் வரை தண்ணீர் வழங்க வேண்டும். அதனால், பொதுப்பணித்துறை அவர்களுக்கான நீர்ப் பாசனத்தை உறுதி செய்ய வேண்டும், ’’ என்றார்.

விவசாயி ராமன் பேசும்போது, "உசிலம்பட்டி கண்மாயில் 186 ஏக்கர் நிலத்தை பலர் 10 ஏக்கர், 18 ஏக்கர் என்று ஆக்கிரமித்து வைத்துள்ளனர். குடிமராமத்து பணி மேற்கொண்டு ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டிலே மனு கொடுத்துள்ளேன். ஆனால், தற்போது வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை" என்றார்.

விவசாயி ரவி கூறும்போது, ”மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கண்மாய்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் பதிவேட்டிலே இல்லை. அதனால், இந்த கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவது, பராமரிப்பது எப்படி என்று தெரியாமல் அதிகாரிகளும் பொறுப்புகளை தட்டிக்கழிக்கின்றனர்” எனக் கூறினார்.

மேலூர் தாலுகா கொட்டக்குடி பகுதியில் 24 பெரிய, சிறிய கண்மாய்கள் உள்ளன. 12 பொதுப்பணித்துறையிடமும், 2 ஊரக வளர்ச்சி துறையிடமும் உள்ளது. மீதி கண்மாய்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே தெரியவில்லை. கடைசியில் அந்த கண்மாய்கள் காணாமல் போய்விடுகின்றன.

கூட்டத்தில் 58-ம் கால்வாய் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு சிறப்பாக நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு விவசாயிகள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.

ஒரே நாளில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்படும்:

விவசாயி மனவாள கண்ணன், ‘‘நெல் கொள்முதல் மையங்களை உடனடியாக திறக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னால் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாமதமாக திறந்தால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவார்கள், ’’ என்றார்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிச்சாமி பேசுகையில், ‘‘கொட்டாம்பட்டி, மேலவளவு, மேலூர் பகுதியில் நெல் கொள்முதல் மையங்கள் இன்னும் திறக்கப்படவே இல்லை, ’’ என்றார். மறுபடியும் விவசாயிகள் நெல்கொள்முதல் மையங்களை பற்றி பேசியதால் உடனே ஆட்சியர் டிஜி.வினய், சம்பந்தப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கூட்டத்திலே போனில் விவசாயிகள் பிரச்சினைகளை சொல்லி நெல் கொள்முதல் மையங்களை நாளை மாலைக்குள் திறக்க வேண்டும், என்றார்.

அதன்பிறகு ஆட்சியர் பேசுகையில், ‘‘மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 63 நெல் கொள்முதல் மையங்களையும் நாளை மாலை(இன்று) திறக்கப்பட்டுவிடும். திறக்கப்படாவிட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x