

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. முக்கிய சாட்சியை அடுத்த வாய்தாவின்போது ஆஜர்படுத்தவதாக அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சாட்சிகளிடம் விசாரணை நேற்று தொடங்கியது. சாட்சிகளுக்குத் தமிழ் தெரியாததால், மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை இன்று (ஜன.29) தொடங்கியது. 2-ம் சாட்சி பஞ்சம் விஸ்வகர்மா மற்றும் 3-ம் சாட்சி சுனில் தாபா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்.
இருவரும், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நடந்த ஓம் பகதூர் கொலை மற்றும் எஸ்டேட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்துக் கூறினர். இந்தியில் அவர் கூறியதை அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர், நீதிபதியிடம் தமிழில் கூறினார். சாட்சிகளின் வாக்குமூலத்தை நீதிபதி பி.வடமலை பதிவு செய்தார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த், "முதல் சாட்சியை ஆஜர்படுத்தாமல், 2 மற்றும் 3-ம் சாட்சிகள் மட்டுமே ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. முக்கிய சாட்சி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாங்கள் குறுக்கு விசாரணை செய்வோம். மேலும், ஒரு வருட காலமாக சயான் மற்றும் மனோஜ் சிறையில் உள்ளதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.
அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் அடுத்த விசாரணையின்போது முக்கிய சாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என உறுதியளித்தார். இதனால், நீதிபதி பி.வடமலை விசாரணையை பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். சயான் மற்றும் வாளையார் மனோஜின் ஜாமீன் மனுக்களைப் பெற்றுக்கொண்ட நீதிபதி பி.வடமலை, அந்த மனுக்கள் மீது எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.