Last Updated : 29 Jan, 2020 04:39 PM

 

Published : 29 Jan 2020 04:39 PM
Last Updated : 29 Jan 2020 04:39 PM

குயில் தோப்பு வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்: புதுச்சேரி முதல்வருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சலசலப்பு

பாரதியாரின் குயில்தோப்பு வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் விழாவில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்து வரவேற்புரையாற்றினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மனநலக் கல்வி மேம்பாட்டுக்கான 2 நாள் பயிலரங்கம் இன்று (ஜன.29) கல்வித்துறை வளாகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் தொடங்கியது. மகளிர் ஆணையத் தலைவி ராணி ராஜன் பாபு வரவேற்றார். இவர் முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு ஆகியோருடன் மேடையில் அமர்ந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மகளிர் ஆணையத் தலைவி ராணி, குயில் தோப்பு வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்.

குயில் தோப்பு வழக்கு

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பாரதியார் பாடிய குயில் தோப்பு இடத்தை, போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகப் பல போராட்டங்களும் நடைபெற்றன.

இதையடுத்து இப்பகுதியின் ஆராவமுதன் என்பவருக்குச் சொந்தமான இடத்துக்கான அதிகாரம் சீனிவாசமூர்த்தியிடம் இருந்தது. அப்பெயரிலிருந்து வேறு ஒருவர் பெயருக்கு இடத்தை மாற்றிப் பதிவு செய்ததாக அவர் புகார் தந்தார். ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

வழக்குப் பதிவு செய்யப்படாததால் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சீனிவாசமூர்த்தி நாடினார். நீதிபதி தாமோதரன், சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். போலி ஆவணம் தயாரித்து வேறு பெயருக்கு மாற்றியதாக கோபிநாத், புதுச்சேரி மகளிர் ஆணையத் தலைவி ராணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற ராணி, முதல்வருடன் மேடையில் அமர்ந்திருந்தார். இதை விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் வித்தியாசமாக குறிப்பிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இவ்வழக்கில் ராணி ஜாமீன் பெற்றுள்ளார். அவர் மகளிர் ஆணையத் தலைவி பதவியில் நீடித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "புதுவையில் ஒரு பெரிய கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு அரசு ஊழியர் வேலையை விட்டு வீட்டுக்கு வந்தால், அவருக்கு உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாது. இதுமாதிரி இருந்தால் வாழ்ந்து ஒரு புண்ணியமும் இல்லை. நம்முடைய பங்கு சமுதாயத்துக்கும் இருக்க வேண்டும். பிறந்து வளர்ந்த மண்ணுக்கும், நாட்டுக்கும் செய்ய வேண்டியது நம்முடைய கடமை. உலக நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் நிறைய பேரைக் கெடுத்துவிட்டது. மன அழுத்தத்துக்கு அதுவும் ஒரு காரணம். டிக் டாக்கால் நிறைய பேர் வீணாகின்றனர். டிக் டாக்கை ஒழிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x