Published : 29 Jan 2020 01:19 PM
Last Updated : 29 Jan 2020 01:19 PM

டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை இழந்து விட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்: கே.எஸ்.அழகிரி

டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை இழந்து விட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசின் நிர்வாகம் எத்தகைய சீர்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து வெளிவருகிற செய்திகளே தகுந்த சான்றுகளாக அமைந்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 2019 இல் நடத்திய எழுத்துத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்தது அம்பலமாகி, அதில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தரத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேட்டில் தொடர்புடைய இடைத் தரகர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரிவான விடையளிக்கும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் இல்லாதவை குரூப் - 2 ஏ, குரூப் - 4 தேர்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 'அப்ஜெக்டிவ்' வகையில் வினாத்தாள்கள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே, சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் வேலை உறுதி செய்யப்படும். எனவே, குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளில் வெற்றி பெறாதவர்கள் கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்வுகளை கருதி, தீவிரமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணைகள் முடியாதிருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வுகளில் வேறு எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என்று அவசர அவசரமாகக் கூறியது பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 தேர்வின் போது வினாத்தாள்கள் வெளிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே டிஎன்பிஎஸ்சி தன்னுடைய நடவடிக்கைகளைக் கடுமையாக்கி இருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட முறைகேடுகளைத் தவிர்த்திருக்க முடியும். ஏதோ ஒரு வகையில் டிஎன்பிஎஸ்சி தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் முறைகேடுகளை நடத்துவதற்கு வாய்ப்பை வழங்குகிற வகையில் ஏற்பாடுகள் நடந்திருப்பதாக நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இத்தகைய முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்ய முடியாது.

தேர்வு முறைகேடுகளுக்கான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களோடு இப்பிரச்சினை முடிந்து விடக் கூடியதல்ல. இது 16 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இதுகுறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் இடைத்தரகர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வு எழுதி, பிறகு வேறு ஒரு மை மூலம் அதையே திருத்தி எழுதும் வகையில் இந்த முறைகேடு நடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரக்கூடியதாக உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு மோசடி வெளிவந்துள்ள இந்தநிலையில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 33 பேரைத் தேர்வு செய்து வெளியிட்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து ஆணையிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறையில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு, கடந்த 2018-ல் தேர்வு நடைபெற்றது. இதில், வெறும் 33 பேரை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்தான் மேற்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2018 ஆம் ஆண்டில் கலந்து கொண்ட 1,328 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தகைய அவமானங்களை உயர் நீதிமன்ற ஆணையின் மூலமாக டிஎன்பிஎஸ்சி தொடர்ந்து பெற்று வருகிறது. இந்தப் பின்னணியில் டிஎன்பிஎஸ்சி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்துகிற தேர்வுகள் நேர்மையாக நடைபெறாது என்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி மீது படிந்திருக்கிற அழியாத கறையைத் துடைக்க வேண்டுமானால், தமிழக ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரணையினால் உண்மைகள் வெளிவராது. டிஎன்பிஎஸ்சியைக் காப்பாற்றுகிற முயற்சியில் தான் தமிழக ஆட்சியாளர்கள் மறைமுகமாகச் செயல்படுவார்கள்.

எனவே, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த முறைகேடுகள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த 'தமிழகத்தின் வியாபம்' என்று கருத வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த அனைத்து முறைகேடுகள் குறித்தும் பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை மத்திய புலனாய்வுத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு ஏற்படும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x