

தஞ்சை பெரிய கோயிலின் பாரம்பரியம், பழக்கவழக்கம் தெரியாதவர்களால் தமிழில் குடமுழுக்கு கோரி பிரச்சினை ஏற்படுத்துகின்றனர் என தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி ஏராளமானோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் உதவி ஆணையர் எஸ்.கிருஷ்ணன் இன்று (ஜன.29) பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளைப் பின்பற்றியே பூஜைகள் நடைபெறுகின்றன. அனைத்து பூஜைகளின் போதும் திருமுறைகள், திருவிசைப்பா பாடப்படும். இது பெரிய கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்களுக்கும் தெரியும்.
தமிழில் அனைத்து திருமுறைகளையும் பாடுவதற்காக இரு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரிய கோவில் பூஜைகளில் தமிழ் திருமுறைகள் முக்கிய பங்காற்றுகிறது.
கடந்த குடமுழுக்கின் போது தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற பிரச்சினை எழவில்லை. பெரியகோயிலில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் மற்றும் பழக்கங்களைத் தெரியாதவர்கள் இப்போது பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர்.
பிப். 5-ல் நடைபெறும் குடமுழுக்கிற்கு சிவனடியார்கள் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது. யாகசாலைகளிலும், சந்நிதிகளிலும் திருமுறைகள் பாட பெரியளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
யாகசாலைகளில் மட்டும் இல்லாமல் மகாஅபிஷேகத்தின் போதும் 12 திருமுறைகளும் பாடப்படும். பெரிய கோவில் குடமுழுக்கிற்கு தமிழுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குடமுழுக்கின்போது பிப். 1 முதல் 5 வரை யாகசாலைகளில் திருமுறைகள் பாட 13 ஓதுவார்களும், நடராஜர் மண்டபத்தில் திருமுறை பன்னிசை அகண்ட பாராயணம் பாட 35 ஓதுவார்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நந்தி மண்டபத்தில் பிப். 5-ல் ஓதுவார்கள் மற்றும் குழந்தைகளால் திருமுறை பாராயணம் பாடப்படும். இது தவிர களிமேடு அப்பர் பேரவை குழுவைச் சேர்ந்தவர்கள் பிப். 1 முதல் திருமுறை பாராயணம் பாடும் பணிக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மகா அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் திருமுறைகளை பாடுவார்கள்.
குடமுழுக்கை ஒட்டி பெரிய கோயிலில் புதிய கொடி மரம் நடப்பட்டுள்ளது. அப்போது தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு குழுவினர் திருமுறைகள் பாடினர். தானம் வழங்குவதைப் பொருத்தமட்டில் பிராமணர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒதுவார்களுக்கும் தானம் வழங்கப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.