கரோனா வைரஸ்: புதுச்சேரியில் பாதிப்பில்லை; மக்கள் பீதியடைய வேண்டாம் - சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் ஹீபெய் மாகாணத்திலுள்ள உவான் நகரில் இருந்து பரவியதாக அறியப்படும் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் முக்கியப் பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வைரஸ் தொற்று, உயிரைப் பறிக்கின்ற அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதால் அந்நாட்டு மக்கள் மட்டுமன்றி பிற நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவில் இருந்து கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டபகுதிகளில் இருந்து 40 மருத்துவ மாணவர்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். மேலும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளுக்கு சீனாவில் இருந்து 3 பேர் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர்கள் முழுமையாக கண்காணிப்பில் உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜன.29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ். நோய் பீதியின் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முயல்கின்றனர்.

புதுச்சேரியில் இருந்து சீனாவில் தங்கிப் படித்த 2 மருத்துவ மாணவர்கள் புதுச்சேரி திரும்பி உள்ளனர். இதேபோல் தொழில் சம்பந்தமாக சீனா சென்ற ஒருவரும் திரும்பியுள்ளார். சீனாவில் இருந்து வந்துள்ள மூவரையும் தொடந்து கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அவர்கள் 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக 8 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கோரிமேடு அரசு மருத்துவமனையிலும் ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை".

இவ்வாறு சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in