

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் இன்று (ஜன.29) வெளியிட்ட அறிக்கையில், "சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும், தமிழகத்தையும் பாதிக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.
சீன நாட்டின் ஹீபெய் மாகாணத்திலுள்ள உவான் நகரில் இருந்து பரவியதாக அறியப்படும் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் முக்கியப் பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வைரஸ் தொற்று, உயிரைப் பறிக்கின்ற அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதால் அந்நாட்டு மக்கள் மட்டுமன்றி பிற நாட்டு மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
சீனாவின் அண்டை நாடு என்பதாலும், வர்த்தக ரீதியில் சீனா - இந்தியாவுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்பு பெருகியிருப்பதாலும் சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பயணப்படும் அனைத்து இந்திய, சீன மக்களையும் சர்வதேச விமான நிலையங்களில் முழு பரிசோதனைக்குப் பின்னர் அனுமதித்தாலும், வருமுன் காப்பதாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
சிறப்பு மருத்துவர்கள் குழு அமைத்து கரோனா வைரஸ் தாக்குதல் தடுப்புக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து மக்களின் அச்சத்தைப் போக்கிட மத்திய சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.