Published : 29 Jan 2020 09:16 AM
Last Updated : 29 Jan 2020 09:16 AM

கோவை விமானநிலையத்துக்கு சீனாவில் இருந்து வந்த 8 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: தொடர் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத் துறை தகவல்

சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த 8 பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், அவர்களை 28 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் ஹீபெய் மாகாணத்திலுள்ள வூஹான் மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் இருந்து கரோனா என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் இருந்து கோவையைச் சேர்ந்த 5 பேர், நாமக்கல், பழநி, சேலத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று முன்தினம் கோவை வந்தனர். அவர்களை கோவை விமான நிலையத்தில் முகாமிட்டுள்ள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனை முடிவில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது, 8 பேரிடமும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது. சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும் படியும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகே அனைவரும் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கிறோம். அவர்களிடம் முழு பயண விவரத்தையும் கேட்டுப் பெறுகிறோம்.

பரிசோதனைக்குப்பிறகு முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்று, அறிவுறுத்தல்களை வழங்கி அனுப்பி வைக்கிறோம். சீனாவில் இருந்து வந்த 8 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றாலும் அங்குள்ள சுகாதாரத் துறை அலுவலர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். காற்றுமூலம் கரோனா வைரஸ் பரவுவதால் முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்து கொள்ளுமாறும், வெளி இடங்களுக்கு சென்றால் திரும்ப திரும்ப கை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறோம்” என்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது “கோவை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா வைரஸ் இருக்கிறதா என பரிசோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் எங்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x