

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டபோது ரூ.18 லட்சம் காணாமல் போனதாக நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். சுங்கச்சாவடியில் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரை மக்கள் தாக்க முயன்றதால், வானை நோக்கி ஒருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 25-ம் தேதி செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்துக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையில், பொதுமக்கள் சுங்கச்சாவடியை சூறையாடினர்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜஸ்தான் மாநிலம்குல்தீப் சிங் (21) உத்தரபிரதேசம் மாநிலம் விகாஸ் குப்தா (21)செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்து(40) மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (38) நடத்துநர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பசும்பொன் (38) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பலரைத் தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் சம்பவத்தின்போது சிலர் பல லட்சம் வசூல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தின்போது சுங்கச்சாவடியில் இருந்த ரூ18 லட்சம் காணாமல் போனதாக சிசிடிவி ஆதாரங்களுடன் சுங்கச்சாவடி மேலாளர் செங்கல்பட்டு தாலுக்காகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது சுங்கச்சாவடியில் வாகனங்கள் மூன்றாவது நாளாக கட்டணங்கள் இன்றி செல்கின்றன.
தாக்குதல் சம்பவத்தின்போது, போலீஸார் அங்கு வந்து பொதுமக்களையும், சுங்கச்சாவடி ஊழியர்களையும் கட்டுப்படுத்தினர். அப்போதுபோலீஸார் சில ஊழியர்களை தாக்கினர் அப்போதுசுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர்எஸ்.ஐ. மணிகண்டனை திருப்பித் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த கூட்டத்தினரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.
கூட்டத்தை கலைக்க செங்கல்பட்டு துணை கண்காணிப்பாளர் கந்தன் ஒருமுறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதலை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.