எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான ஷமீம், தவுபீக் வீடுகளில் சோதனை: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஆதாரம் சிக்கியது

சோதனை நடத்துவதற்காக நாகர்கோவில் இளங்கடையில் தவுபீக் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார்.
சோதனை நடத்துவதற்காக நாகர்கோவில் இளங்கடையில் தவுபீக் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார்.
Updated on
1 min read

எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளான தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோரை அவர்களது வீடுகளுக்கு நேற்று அழைத்துச் சென்று தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், வெளிமாநிலத்தவர்களுடன் தவுபீக் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும், தீவிரவாத செயல்களில் அப்துல் ஷமீம் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் சிக்கின.

எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சர்வதேச அளவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். வில்சன் கொலைக்கு பின்னணியில் செயல்பட்ட நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளில் சோதனை

தவுபீக்கை இளங்கடையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது வெளிமாநிலத்தவர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.

இதுபோல், அப்துல் ஷமீமை திருவிதாங்கோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சோதனை நடத்தினர். சோதனையின்போது, தீவிரவாத செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இருவரது வீடுகளில் இருந்தவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அரை மணி நேரத்துக்கு மேல் நடந்த சோதனைக்கு பின்னர் இருவரும் மீண்டும் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்றும், நாளையும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் பல முக்கிய ஆதாரங்களை திரட்டுவதற்கு போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in