Published : 29 Jan 2020 07:59 AM
Last Updated : 29 Jan 2020 07:59 AM

தமிழகத்தில் 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையனிடம் கே.பாலகிருஷ்ணன் நேரில் மனு

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு அளித்தார். இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சாதாரண ஏழை, கிராமப்புற மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வந்துள்ள கல்வி ஆய்வறிக்கைகளின்படி, பள்ளிக் குழந்தைகளுக்கு தேர்வு வைத்து கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில், 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன உளைச்சல் மட்டுமின்றி சுமையை உருவாக்கும்.

‘தேர்வு மட்டும் தான் நடத்துவோம். யாரையும் 3 ஆண்டுகளுக்கு பெயிலாக்க மாட்டோம்’ என்று அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு பின் பெயிலாக்கினால், குறிப்பாக மாணவிகள் பள்ளிப் படிப்பையே விட்டுவிடும் சூழல் ஏற்படும்.

தமிழகத்தில் நீண்ட காலமாக கல்வித் துறை நல்ல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. சத்துணவு முதல் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. பாடம் போதிக்கும் முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இப்படிப்பட்ட நிலையில், 5 மற்றும் 8- ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரினோம்.

அமைச்சரோ, மாணவர்கள் மத்தியில் கல்வித் தரம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார். கல்வித் தரத்தை மேம்படுத்த வேறு தொழில்நுட்ப வழிகளைக் கண்டுபிடியுங்கள். மாணவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்காதீர்கள் என்று நாங்கள் கூறியுள்ளோம்.

மேலும், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களுடன் கலந்துபேசி முடிவெடுங்கள் என்றும் கூறியுள்ளோம். அவ்வாறு செய்வதாகஅவரும் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x