Published : 29 Jan 2020 07:55 AM
Last Updated : 29 Jan 2020 07:55 AM

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பிப். 2-ல் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற கோரியும், மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கையெழுத்து இயக்கத்தை அனைத்து கட்சி தலைவர்கள் தொடங்கி வைக்கும் இடங்களின் விவரத்தை திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது.

இதன்படி, சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆவடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சென்னை துறைமுகத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை ராயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், பாபநாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதுரையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x