

டிஸ்கவரி சேனல் வழங்கும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ரஜினி காயமடைந்ததாக வந்த தகவலை அடுத்து சென்னை திரும்பிய ரஜினி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பேசிய பேச்சு சர்ச்சையானது. அதையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் எழுந்தன. கடந்த 10 நாட்களாக தமிழக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ரஜினி இருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை அவர் திடீரென மைசூர் புறப்பட்டுச் சென்றார்.
அவர் மைசூர் செல்ல புறப்பட்ட விமானம் வானில் எழும்பிய சில மணிநேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கீழே இறங்கியது. பின்னர் 2 மணிநேரத்திற்குப் பின் மைசூர் புறப்பட்டுச் சென்றார்.
மைசூரில் அவர் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் நாயகன் பியர் கிரில்ஸுடன் கலந்துகொண்டு நடித்தார்.
அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்த நிகழ்ச்சி அது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் ஏற்கெனவே நடித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ரஜினிக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
நேற்றிரவு மைசூரிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஷூட்டிங் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூரில் நடந்தது. அதை முடித்துவிட்டு வருகிறேன். அதில் எனக்கு அடிபட்டுவிட்டது என்று சொன்னார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. ஷூட்டிங் நடந்த இடத்தில் நிறைய முட்கள் இருந்தன. அதில் சில முட்கள் குத்தின. அவ்வளவுதான்” என்றார்.