Published : 29 Jan 2020 07:49 AM
Last Updated : 29 Jan 2020 07:49 AM

செஞ்சிலுவை சங்கங்களின் ஊழலற்ற, நேர்மையான சேவைக்கு வெளிப்படைத் தன்மை முக்கியம்: தமிழக பிரிவு நூற்றாண்டு தொடக்க விழாவில் ஆளுநர் கருத்து

செஞ்சிலுவை சங்க பிரிவுகள்ஊழலற்றதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண் டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தினார்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். இதுதவிர, ரூ.3 லட்சம் மதிப்பிலான செயற்கை உடல் உறுப்புகளை மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவற்றோர், முதியோர் மற்றும்மாற்று திறனாளிகள் நல இல்லங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அப்போது அவர் வழங்கினார்.

மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வழங்கிய இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள், சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் வழங்கிய மீட்புப் படகு ஆகியவற்றின் செயல்பாடுகளையும் தொடங்கிவைத்தார். இதுதவிர, அருங்காட்சி யகத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக பிரிவு, இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. செஞ்சிலுவை சங்கத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதேபோல், ஒவ்வொரு மனிதரும் தனிப்பட்டமுறையிலும் செஞ்சிலுவை சங்கமும் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மாநிலம், மாவட்டம் என அனைத்து நிலையிலும் உள்ள சங்கங்கள், சங்கத்தில் பணியாற்றுவோர் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இந்த தருணத்தில் ஊழலற்ற சேவை தேவைப்படுகிறது. ஏழை மக்களுக்கு வரும் காலத்தில் மிகவும் கூடுதலான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய தலைமை அலுவலக செயலாளர் ஆர்.கே.ஜெயின், பேரிடர் காலசெயல்பாட்டுக்காக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதார திட்ட இயக்குநர் எஸ். நாகராஜ், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் டி.கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆளுநர் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், செஞ்சிலுவை சங்க தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, துணைத் தலைவர் சங்கர் நாராயணன், பொதுச் செயலாளர் நஸ்ருதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x