

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
டிஎன்பிஎஸ்சியின் குருப்-4 தேர்வில் முறைகேடுநடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாகசிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.தேர்வில்முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க்ஓம்காந்தன், இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியைசேர்ந்த வெங்கட்ரமணன், தேனிமாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
மேலும் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் நூறுஇடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூரை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆவடியை சேர்ந்த காலேஷா, திருவல்லிகேணியை சேர்ந்த நிதீஷ்குமார், ராணிப்பேட்டையை சேர்ந்த கார்த்தி, திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 12 பேர் சிபிசிஐடிபோலீஸாரால் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் இடைத்தரகர்கள் மூலம், தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை நடந்துள்ளது. தேர்வு முறைகேட்டில் தலைமறைவாக இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார், பல ஆண்டுகளாக தேர்வுமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால், அவரை கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் இன்று ஆலோசனை
இந்நிலையில் அமைச்சர் டி.ஜெயக்குமார், இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.