

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகள் அந்தந்தமாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் தலைவர் மற்றும்துணைத் தலைவர் போன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் தேர்தலை நடத்துமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிஎம்.சத்தியநாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “மறைமுகத் தேர்தல் நடத்தப்படாத 355 பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி (நாளை) தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த உத்தரவிட வேண்டும். நகர்ப்புற மற்றும் எஞ்சிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது வண்ண வாக்குச்சீட்டுக்களை தனித்தனி பெட்டிகளில் போட உத்தரவிட வேண்டும்” என்றார்.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளன. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. வண்ண வாக்குச்சீட்டுக்களை தனித்தனி பெட்டிகளில் போட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். வண்ண வாக்குச்சீட்டுக்களை தனித்தனி பெட்டிகளில் போட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.