Published : 29 Jan 2020 07:11 AM
Last Updated : 29 Jan 2020 07:11 AM

கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்: பன்றிக்காய்ச்சலை போன்றதுதான் கரோனா வைரஸ் காய்ச்சல்

பன்றிக்காய்ச்சலை போன்றது தான் கரோனா வைரஸ் காய்ச்சல் என்று தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சமடையத் தேவையில்லை. பன்றிக்காய்ச்சலை போன்றதுதான் கரோனா வைரஸ் காய்ச்சல். அறிகுறிகள் தொடங்கி, பாதிப்பு வரை அனைத்தும் பன்றிக்காய்ச்சல் போன்றே இருக்கும். நாம் பன்றிக்காய்ச்சலை பார்த்துவிட்டதால், கரோனா வைரஸ் வந்தாலும் எளிதாக தடுத்துவிட முடியும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைப்பது உள்ளிட்ட அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்நிலையில் உள்ளன.தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில் தனியே மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் சீனாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக பரிசோதனை செய்கின்றனர். கடந்த 10 நாட்களில் சீனாவில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்ததில், 20 பேரை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த 20 பேருக்கும்கரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும்போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும். கரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதேபோல வீடு திரும்பிய உடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல், இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சிறிது தூரம் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும்.

அச்சம் வேண்டாம்

கரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி தொந்தரவு போன்றவை உள்ளன. சாதாரண காய்ச்சலுக்கூட இதுபோன்ற பிரச்சினை இருக்கும். அதனால், இந்த அறிகுறிகள் இருந்தால் கரோனா வைரஸ் தொற்று என்று யாரும் பயப்பட தேவையில்லை. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் யாரும் தாமாகவே கடைகளுக்குச் சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x