

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அது குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்திருந்த ஸ்டாலினின் பேட்டி முரசொலி நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி வெளியானது.
அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய முகநூல் பக்கத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து, டிசம்பர் 30-ம் தேதி முரசொலி நாளிதழில் வெளியானது.
இந்நிலையில், முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு கருத்துத் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியுள்ள ஸ்டாலினை, அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.