Published : 28 Jan 2020 09:18 PM
Last Updated : 28 Jan 2020 09:18 PM

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு: உயர் நீதிமன்றம் 

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொந்தளிப்பான நேரங்களில், போராட்டக் காலங்களில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காலங்களில் பிரிவு 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக்கூட்டம் , உண்ணாவிரதம், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், கும்பலாகக் கூடுதல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட அனைத்துக்கும் காவல் அனுமதியின்றி நடத்தக்கூடாது என அறிவிக்கப்படும். இதற்கு 5 நாட்களுக்கு முன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

முக்கியமான பிரச்சினைக்குரிய காலங்களில் காவல் ஆணையர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை உத்தரவு பிறப்பிப்பார். தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 13 முதல் 28 வரை சென்னை நகர காவல் சட்டம் 41 என மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் காயத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், “போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர அதிகாரம் உள்ளதே தவிர, நகர காவல்துறை சட்டத்தைப் பின்பற்றி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என வாதிட்டார்.

அப்போது உத்தரவிட்ட நீதிபதி, “கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனைக் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்குத் தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x