Published : 28 Jan 2020 08:16 PM
Last Updated : 28 Jan 2020 08:16 PM

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணி; டிஎன்பிஎஸ்சி தேர்வுப் பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 33 விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்க்கான தேர்வை அறிவித்து விண்ணப்பங்களைப் பெற்றது டிஎன்பிஎஸ்சி. இப்பணிக்குத் தேர்வை எழுத 2,176 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மீதமுள்ளவர்களுக்கு, கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவேண்டும். அதன்பின்னர் விதிப்படி ஒரு பதவிக்கு இரு விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் 226 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும்.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேரை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து செந்தில்நாதன் என்கிற விண்ணப்பதாரர் உட்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுக்களில், அங்கீகரிக்கப்பட்ட பணிமனையில் அனுபவச் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிகளில் திடீர் மாற்றம் கொண்டு வந்து, அந்தப் பணிமனையில் பணியாளர் வருகைப் பதிவு இல்லை, சேமநல நிதி இல்லை என்பன உள்ளிட்ட தேவையற்ற காரணங்களைக் கூறி, தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடைபேற்று வந்தது. வழக்கில் மனுதாரர்கள், டிஎன்பிஎஸ்சி, தேர்வாணையம் தரப்பு, போக்குவரத்துத் துறை தரப்பு, அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு வழக்கறிஞர் போத்திராஜ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை வைத்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களைப் போல, நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, புதிய விதிகளை வகுப்பதாகவும், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏற்கெனவே 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய விதிகளின்படி, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற ஆயிரத்து 328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டுமென மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்தப் பணிகளை நான்கு வாரங்களில் முடித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை அறிக்கையைப் பெற்ற நான்கு வாரங்களில், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, இறுதிப் பட்டியலை தயாரித்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x