Published : 28 Jan 2020 03:59 PM
Last Updated : 28 Jan 2020 03:59 PM

பீர்க்கங்கரணை நெடுங்குன்றம் பகுதியில் தொடர் திருட்டு: பயத்தில் பொதுமக்கள் 

தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரணை பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், போலீஸார் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் தேவராஜ் நகரில் வசிப்பவர் துரைமுருகன். இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு தூத்துக்குடிக்குச் சென்றார். திருமணம் முடிந்தவுடன் நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்தவர், கதவைத் திறக்கும் முன் வாசல் கதவு உடைந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே திருட்டு நடந்திருப்பதை அறிந்த அவர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் நகை, 18 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதே பகுதியில் கடந்த ஞாயிறு அன்று காமராஜ் என்பவர் மதியம் 2 மணி அளவில் தனது வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். வீட்டைத் திறக்கச் சென்றவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.

பீர்க்கங்கரணை காவல் நிலைய வட்டத்துக்குள் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் செல்ல அஞ்சும் நிலை உள்ளது. ரோந்துப் பணியை போலீஸார் அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் பொதுமக்கள் வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x