Published : 28 Jan 2020 02:32 PM
Last Updated : 28 Jan 2020 02:32 PM

மதுரை மாநகராட்சிக்கு நிரந்தர நகர்நல அலுவலர் நியமனம் எப்போது?- ஓராண்டாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படும் அவலம் 

கடந்த ஓராண்டாக மதுரை மாநகராட்சி நகர் அலுவலர் பணியிடத்திற்கு நிரந்தர அதிகாரி நியமிக்காமல் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.

ஒரு மாநகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது முக்கியமானது. இதில், குடிநீருக்கு அடுத்து சுகாதாரம் முக்கியமானது. தற்போது நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் வாக்களிப்பில் கடந்த ஆண்டு மதுரை மாநகராட்சி பின்னடைவை சந்தித்ததிற்கு சுகாதாரம் முக்கியக் காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுகாதாரத்திட்டங்களை செயல்படுவத்துவதில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால், முழுநேரமும் சுகாதாரத்தை கண்காணிக்கும் மாநகராட்சி நகர் நல அலுவலர் பணியிடத்திற்கு நிரந்தர அதிகாரி இல்லை. கடைசியாக சதீஷ் ராகவன், மாநகராட்சி நகர் அலுவலராக நிரந்தர பணியிட அதிகாரியாக இருந்தார். அவருக்குப் பிறகு தற்போது வரை மாநகராட்சி நகர் அலுவலராக பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது மாநகராட்சி நகர் நல அலுவலராக கூடுதல் பொறுப்பாக சுகாதாரத்துறை பயிற்சிப் பள்ளி முதல்வராக இருக்கும் டாக்டர் செந்தில் கவனிக்கிறார். இவருக்கு முன், இதே மாநகராட்சி நகர் நல அலுவலராக தற்போது உதவி நகர்நல அலுவலராக உள்ள வினோத் கவனித்து வந்தார். இவருக்கு முன்பும் உதவி நகர் அலுவலரே, மாநகராட்சி நகர்நல அலுவலர் பணியிடத்தை சேர்த்து கவனித்தனர்.

இவர்களால், உதவி நகர் நல அலுவலர், மாநகர நகர் நல அலுவலர் ஆகிய பணியிடங்களைச் சேர்த்துப் பார்க்க முடியவில்லை. அதனால், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், மாநகராட்சிக்கு நிரந்தரமாக நகர் அலுவலர் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால், மீண்டும் நிரந்தரப் பணியிடமாக மாநகராட்சிக்கு நகர் நல அலுவலரை நியமிக்காமல் டாக்டர் செந்தில், பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரும், மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் சுகாதாரத்துறை பயிற்சி பள்ளி முதல்வர் ஆகிய இரு பொறுப்புகளை சேர்த்து கவனிக்கிறார். இவராலும் பணிசுமையால் இரு பொறுப்புகளை சேர்த்து கவனிக்க முடியவில்லை.

அதனால், மாநகராட்சி சுகாதாரத்துறையை முழுமையாக அவரால் கண்காணிக்க முடியாமல் சுகாதாரத்துறை திட்டங்களை முழுமையாகவும், தரமாகவும் செயல்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநாகராட்சி நகர்நல அலுவலராக வருவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் போட்டியிருந்தாலும், அதற்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது.

அதை செலவு செய்து யாரும் இந்த பணியிடத்திற்கு(மாநகர நகர் நல அலுவலர்) வர விரும்பவில்லை. அதனாலே, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

அதற்காக, பொறுப்பு அதிகாரி இருப்பதால் சுகாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லிவிட முடியாது. தற்போது நடக்கும் தூய நகரங்கள் கணக்கெடுப்பில் மற்ற மாநகராட்சிகளை முந்தி மதுரை முதல், இரண்டு ஆகிய இடங்களில் மாறிமாறி வந்து கொண்டிருப்பதே அதற்கு சாட்சி, ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x