

கல்லட்டி நீர்வீழ்ச்சியில் விழுந்த இரு இளைஞர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த சுந்தர்ராஜ், ஆனந்த், விஜயகுமார், உதகை விக்டோரியா ஹால் பகுதியை சேர்ந்த சாமுவேல் (23), எல்க்ஹில் பகுதியை சேர்ந்த கணேஷ் (24), பரத் ஆகியோர் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு கடந்த 26-ம் தேதி சென்றனர். அங்கு நண்பர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது சாமுவேல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற கணேஷ் கை கொடுக்க, அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இது குறித்து நண்பர்கள் புதுமந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உதகை தீயணைப்புத்துறை அதிகாரி தர்மராஜ் தலைமையில் பத்து பேர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அன்று மாலையே உடல்களை தேடினர். இருளானதாலும், கடும் குளிர் நிலவியதாலும் தேடுதல் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாளாக நேற்று தண்ணீரில் விழுந்த இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடந்தது. மேலும், கோவையிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரில் விழுந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் படகு மூலமும், நீச்சல் அடித்தும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பெரும் போராட்டத்துக்கு பின்னரும் தண்ணீர் விழுந்தவர்களை மீட்க முடியவில்லை.
இந்நிலையில், உடல்களை மீட்க கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடல் நீச்சல் வீரர்கள் 10 பேரும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வாளர் பிஸ்வால் தமைமையில் 21 பேரும் உதகைக்கு வந்தனர்.
மூன்றாவது நாளான இன்று (ஜன.28) காலை முதல் தேடுதல் பணி நடந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரது உடல்களும் இன்று மீட்கப்பட்டன.