Published : 28 Jan 2020 08:44 AM
Last Updated : 28 Jan 2020 08:44 AM

காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்த நடிகர் கார்த்தி, கொமதேகவிற்கு பாசனசபை அழைப்பு

மாசடைந்துள்ள காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்த கொமதேகவும், நடிகர் கார்த்தியும் முன் வந்துள்ளதற்கு காலிங்கராயன் பாசனசபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் தொடங்கி ஆவுடையார் பாறை வரை 90 கி.மீ. தூரம் கொண்ட காலிங்கராயன் கால்வாய் 700 ஆண்டுகள் பழமையானதாகும். நதிகள் இணைப்பின் முன்னோடியாக விளங்கிய காலிங்கராயனால் வெட்டப்பட்ட இந்த கால்வாய் மூலம், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகின்றன. இதையடுத்து தை மாதம் 5-ம் நாள் காலிங்கராயன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலிங்கராயன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி, கடந்த 20 ஆண்டுகளில் காலிங்கராயன் கால்வாய் பெரிதும் மாசடைந்துள்ளது என்றும், நீர் நஞ்சாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இளைஞர்களைத் திரட்டி காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காலிங்கராயன் கால்வாய் பாசன சபையின் சார்பில், ஈரோடு மாவட்டம் பாசூர் அருகேயுள்ள பழனிக்கவுண்டன்பாளையத்தில் கால்வாயின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, காலிங்கராயன் பாசனசபைத் தலைவர் வி.எம்.வேலாயுதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீர் நிலை அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் தண்ணீரை அசுத்தப்படுத்தும் வகையில் எவ்வித ஆலைகளையும் அமைக்கக் கூடாது என்கிற சட்டம் உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் கால்வாயின் வலதுகரைப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆலைகளிலிருந்து வெளியேறும் விஷக்கழிவுகள் நேரடியாக கால்வாயில் கலந்து வருகின்றன. இதனால், கால்வாய் நீரில் நச்சுத்தன்மை அதிகரித்து, விவசாய நிலங்களும், விவசாயப் பொருட்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி, நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை.

காலிங்கராயன் கால்வாயை தூய்மைப்படுத்துவதற்கு நடிகர் கார்த்தியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வந்திருப்பது வரவேற்கத் தக்கது.

இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விடுவதை விட்டுவிட்டு, விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் கால்வாயைத் தூர்வாரும் பணியில் ஈடுபட வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x