

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 50 பெட்டிக் கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச் செல்வன் கூறியதாவது:
கோவை டாடாபாத், சிவானந்தா காலனி மற்றும் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், சூலூர், பீளமேடு, காளப்பட்டி, அவிநாசி சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு முதல்முறை குற்றத்துக்காக தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக மொத்தம் 165 பெட்டி கடைகளில் ஆய்வு செய்ததில், 50 கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 34.89 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.66 ஆயிரம். முதல்முறை குற்றத்துக்கான அபராத தொகையாக ரூ.2.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இனிவரும் நாட்களிலும் தொடரும். இரண்டாவது முறை மீண்டும் அதே தவறை செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மூன்றாவது முறை குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
உணவுப் பொருட்களில் கலப்படம், கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமி கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை, தரம் குறைவு போன்ற புகார்களை உணவுப் பாதுகாப்புத்துறையின் 9444 042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் அளிக்கலாம். 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.