

எஸ்.ஐ. வில்சன் கொலை யில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் இருவருக்கும், சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, என்ஐஏ அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள, அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோருக்கு, பிற மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, இவ்வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படுகிறது.
தீவிரவாதிகள் இருவரிடமும், என்ஐஏ டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் இருவருக்கும் தொடர்பு உள்ளதா? என அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.
தவுபீக், டெல்லியில் கைதானசெய்யதலி நவாஸ் உட்பட 7 பேர் கடந்த டிச.11-ல் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ரகசிய ஆலோசனை நடத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் தவுபீக்கை காயல்பட்டினம் அழைத்துச் சென்று செய்யதலி நவாஸின் மனைவி உட்பட சிலரிடம் விசாரணை நடத்தினர். இதுபோல், என்ஐஏ அதிகாரிகளும் அங்கு சென்று விசாரித்தனர்.
அடுத்தகட்டமாக கோட்டாறு இளங்கடையில் உள்ள தவுபீக் வீட்டுக்கும், திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் ஷமீம் வீட்டுக்கும் இருவரையும் தனித்தனியாக அழைத்துச் சென்று, அவர்களது குடும்பத்தினரிடம் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.