Published : 28 Jan 2020 07:47 AM
Last Updated : 28 Jan 2020 07:47 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துதல், பட்ஜெட் மற்றும் வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் குறித்து துறைவாரியாக அமைச்சர்களிடம் முதல்வர் பழனிசாமி தனித்தனியாக நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும், பொதுவெளியில் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ராணுவக் கட்டுப்பாடுள்ள கட்சியாக அதிமுக அறியப்பட்டுவந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குகின்றன

குறிப்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘சசிகலா சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது’ என்று சமீபத்தில் தெரிவித்த கருத்து, அமைச்சர்கள் மத்தியில்கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

அதேபோல், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன், ‘திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைவான நிதி வழங்கப்படும்’ என்று பேசியது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரல்களுக்குத் தீனி போடுவதாக அமைந்துவிட்டது.

இதுதவிர, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும், விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், துறைவாரியான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் நேற்று தனித்தனியாகச் சந்தித்து, இவை குறித்து பேச திட்டமிட்டு, அதற்கான உத்தரவுகளையும் வழங்கினார். தமிழக முதல்வர் ஒருவர், துறைரீதியாக அமைச்சர்களைத் தனித்தனியாக சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சர்களுடனான சந்திப்பின்போது, பொதுவெளியிலும், ஊடகத்திலும் அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, அப்பகுதிகளுக்கு தேவையான நிதியை பெற்றுத் தருவதில் அமைச்சர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், தேர்தலுக்கு முன்,தொகுதிகளில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தங்கள் துறைகளில்இருந்து புதிதாக தொடங்கப்பட வேண்டிய திட்டங்கள் அவற்றுக்கான நிதி ஒதுக்கம் குறித்தும், மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தங்கள் துறையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்த தாகவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x