Published : 28 Jan 2020 06:50 AM
Last Updated : 28 Jan 2020 06:50 AM

விழிப்புணர்வு அளித்த சிறந்த நாளிதழுக்கான தேசிய விருது: வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்திய ‘இந்து தமிழ் திசை’

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு, முதல் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்திய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தேசிய ஊடக விருது அளித்து கவுரவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்தியாவின் குடியரசுத் தலைவரின் கையால் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

‘நம் வாக்கு... நம் கடமை’ எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பல்வேறு வகைகளிலும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துச் சென்றது.

நேர்மையான, வெளிப்படையான வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விளம்பரங்கள், ’ஸ்லோகன்’ போட்டிகள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாதிரிவாக்குப்பதிவு மையங்கள் என நேரடியாகவும், பத்திரிகை, இணையதளம் வாயிலாகவும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு பணியை மேற்கொண்டது.

ஜனநாயகத் திருவிழா

குறிப்பாக, தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதுமே, தொகுதிவாரியாக மக்களவை, சட்டப்பேரவை தொகுதியின் அமைவிடம்,மக்கள்தொகை, தொகுதியின் வளம், தொழில், மக்கள் பிரச்சினைகள் என அனைத்தையும், ‘ஜனநாயகத் திருவிழா’ என்ற முத்திரையுடன் ‘இதுதான் இந்தத் தொகுதி’ என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டு, மக்கள் பிரதிநிதிகள் செய்ததையும், செய்ய வேண்டியதையும் ‘இந்து தமிழ் திசை’ விளக்கி எழுதியது.

கோவை, நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், மாவட்ட அரசு நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியபோது, சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனமும் இதில் இணைந்துகொண்டது. ‘விரலின் நுனி மை.. அது தேசத்தின்வலிமை’ என்பது உள்ளிட்ட கோஷங்களுடன் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கோவை ஆட்சியர் கு.ராசாமணி, நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினர்.

வழிகாட்டுதல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவின் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது, வாக்களிப்பதன் அவசியம், வாக்குச்சாவடிகள் விவரம், பாதுகாப்பு, கண்காணிப்பு போன்றவை தொடர்பான வழிகாட்டுதல்களையும் லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இந்த பிரச்சாரத்தின் தாக்கத்தை உணர்ந்த இந்திய தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் தேசிய அளவில் சிறந்த நாளிதழ் என்பதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு உரித்தாக்கி, அதற்கான விருதையும் அறிவித்தது. கடந்த 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய விருதை ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகனிடம் வழங்கினார்.

முக்கியத்துவம் வாய்ந்த Forum of the Election Management Bodies of South Asia (FEMBoSA) அமைப்பைச் சேர்ந்த பல்வேறு தெற்காசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளும் இந்த விருது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் இருந்து வெளியாகும் ‘இந்து தமிழ் திசை’, தேசிய விருது பெற்றிருப்பதற்கு முதல்வர் பழனிசாமியும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தேசிய விருது பெற்ற ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு: தேர்தல் நடவடிக்கையின்போது, வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதில் பத்திரிகை, ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பத்திரிகைகளின் இந்த பணி வேறு எவராலும் செய்ய முடியாததாகும். பெருமைமிக்க இந்த பணிக்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் விருதை பெற்றுள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு எனது பாராட்டுகள்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா: வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உறுதுணையாக இருந்தது. நாளிதழில் அதிக செய்திகளை வெளியிட்டும், விளம்பரப்படுத்தியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு பல வகையிலும் உதவியாக இருந்தனர்.

இதுதவிர, தனியாகவும் காஞ்சிபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டி முதல் தலைமுறை வாக்காளர் விழிப்புணர்வு முகாமை நடத்தினர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘தேசிய வாக்காளர் தின விருது’ பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

நாட்டின் ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்கிறது ‘இந்து தமிழ்’- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

நியாயமான, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தி உண்மையான ஜனநாயகத்தை நிலை நிறுத்திட 1950-ம்ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்ற மாளிகையைத் தாங்கும் கட்டமைப்புகளில் தேர்தல் ஆணையம் முதன்மையானது. ஆகவே, தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளினை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் சீர்மிகு விழிப்புணர்வு பிரச்சாரத்தால் நாட்டின் இளைய சமுதாயத்தினர் ஜனநாயகத்தின் மீதும், அதை தீர்மானிக்கும் தேர்தலின் மீதும் நல்ல நம்பிக்கை பெற்று, எதிர்கால சிந்தனையை வளர்த்து வருகிறார்கள். இளைஞர்களின் பங்களிப்பு காரணமாக, தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதும், வெற்றி பெற்று நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாடுபடுவதும் மேலும் மேலும் அதிகமாகி உறுதியாகி வருகிறது.

இந்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், பத்திரிகைகள், சமூக நல அமைப்புகள், ஊடகங்கள், கலை உலகத்தினர் என்று பலரும் துணைபுரிந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தணியாத ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளேடும் தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆற்றியிருக்கும் விழிப்புணர்வு பணியைப் பாராட்டி, அதன் பிரச்சாரத்தை அங்கீகாரம் செய்து தேசிய விருதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. செய்திகளைக் கொண்டு செல்வது, காலத்துக்கு தேவையான பொருள் பொதிந்த கட்டுரைகளை இயற்றிடச் செய்து வெளியிடுவதில் மட்டுமின்றி, நாட்டின் ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு இந்த விருது கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

விருது பெற்ற ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கும், அதன் ஆசிரியர் கே.அசோகனுக்கும், அவரது குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டுக்காற்றும் நேர்த்தியான பணியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பயனுள்ள பங்களிப்பு தொடரட்டும். மேலும் சிறக்கட்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x